ஆழ்மனப்பதிவறிவு

ஆழ்மனப்பதிவறிவு என்பது மனதில் ஆழமாகப் பதிந்த அல்லது பதியும் விடயங்களை அப்படியே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவைக் குறிக்கும். அவை சரியானதாகவும் இருக்கலாம், பிழையானதாகவும் இருக்கலாம். ஒருவர் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு அமைய பிறராலோ, கொள்கையின் பிடிப்பால் அதன்சார்பாகவோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாகவோ ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவின் நிலையையும் ஆழ்மனப்பதிவறிவு எனலாம்.

குழந்தை மனதில் பதிந்துவிடும் ஆழ்மனப்பதிவறிவு

பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துகொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் முன் வேறு ஒரு தம்பதியினர் தத்தெடுத்து அதுவே தமது குழந்தை எனக் கூறி வளர்ப்பதால், அக்குழந்தையும் தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதித்துக்கொள்ளும் அறிவும் ஆழ்மனப்பதிவறிவே ஆகும்.

கொள்கைப் பிடிப்பினால் ஏற்படும் ஆழ்மனப்பதிவறிவு

கொள்கை ரீதியாக ஒரு தரப்பின் மீது ஏற்படும் அபரிதமான பற்றின் வெளிப்பாட்டால், அதற்கெதிரான அல்லது மாறான கொள்கைகளை ஏற்கமுடியாக மனப்பக்குவற்றத் தன்மையினால், தாம் கொண்டக் கொள்கையே சரியென நினைப்பதும், வாதிடுவதும் கூட ஆழ்மனப்பதிவறிவு வெளிப்பாடுகளே ஆகும்.

அரசியல் எல்லைகள் பதித்துவிடும் ஆழ்மனப்பதிவறிவு

GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த, வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சில விதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இவ்வாறான அறிவின் நிலையும் ஆழ்மனப்பதிவறிவுதான்.

மதங்களின் வாயிலான ஆழ்மனப்பதிவறிவு

குறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கையை இங்கே குறிப்பிடலாம். இவ்வாறு ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடுகளே ஆகும்.

மேற்கோள்கள்

  1. http://www.thinakaran.lk/2011/09/10/?fn=f1109102&p=1[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.
  3. http://navaneeta-kannan.blogspot.ae/2011/02/blog-post_2504.html