உலர் பனிக்கட்டி

சிறிய ஈரமில்பனிக்கட்டிகள் காற்றில் பதங்கமாகும் படிமம்
ஈரமில்பனிக்கட்டியின் படிக அமைப்பு

ஈரமில்பனிக்கட்டி (Dry ice) என்பது கார்பன்-டை-ஆக்சைடின் திடவடிவம் ஆகும். இது உலர் பனிக்கட்டி என்றும் வேதியியலில் கரியமில வாகேகட்டி என்றும் அழைக்கப்படும். இது குளிர்விப்பானாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதை நீரில் கரைக்கும் போது கார்போனிக் அமிலத்தை உருவாக்குவதன் மூலம் நீரின் pH மதிப்பைக் குறைக்கிறது. இதன் நன்மைகளில் ஒன்று இது நீரின் பனிக்கட்டியை விட குறைந்த வெப்பநிலையை உடையது. மேலும் இவை எச்சங்களை விட்டுச் செல்வதில்லை. இயந்திர குளிரேற்றல் (refrigeration) பயன்படுத்த முடியாத இடங்களில் இந்த பனிக்கட்டி உணவுகளைப் பாதுகாக்க உதவும்.

ஈரமில்பனிக்கட்டி புவி அழுத்தத்தில் −78.5 °C (−109.3 °F) பதங்கமாகத் தொடங்கும்.
(பதங்கமாதல் என்பது, ஒரு தனிமம் அல்லது சேர்வை (compound), திண்ம நிலையிலிருந்து, நீர்ம நிலைக்குச் (திரவ நிலை) செல்லாமல் நேரடியாகவே வளிம நிலைக்குச் (வாயு நிலை) செல்வதாகும்).
இந்த அதித குளிர்தன்மையினால் ஈரமில்பனிக்கட்டியை வெறும் கையால் கையாளுவது ஆபத்தானது. இது பொதுவாக நச்சுத்தன்மை கொண்டிருப்பதில்லை. இது பதங்கமாகும் போது மூடப்பட்ட இடத்திலிருந்தால் அதனால் உடலில் அதிகரியம் (hypercarbia) ஏற்படலாம் (உடலில் கார்பன்-டை-ஆக்சைடு அதிகரித்தல்).

மேற்கோள்கள்

  1. Yaws 2001, ப. 125