சிவா இராமநாதன்

சிவா இராமநாதன்
சிவா இராமநாதன்

சிவா இராமநாதன் (சிவயோகநாயகி, பிறப்பு: 1937) பிரான்சு நாட்டின் அதியுயர் விருதான செவாலியர் விருது பெற்ற முதல் யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண் ஆவார். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளதுடன், இலங்கையில் பிரெஞ்சு மொழி வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.

இவர் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறை, பொலிகண்டி, திக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பொலிகண்டி கந்தவன ஆலயத்தை பரம்பரையாக பரிபாளித்துவரும் ஆதீன கர்த்தாக்களின் குடும்பத்து சைவப்பெரியார் திக்கம் செல்லையாப்பிள்ளை, இராயமுத்து அம்மையார் தம்பதிகளின் கடைசிமகள்.

கல்வியும், ஆசிரியப் பணியும்

இவர் தனது ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் கல்லூரியிலும், பின்னர் பருத்தித்துறை மெதடிஸ்த மிஷன் கல்லூரியிலும் கற்றார். அதன் பின் கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் சேர்ந்து மனையியலில் சிறப்புப் பட்டம் (B .Sc) பெற்று 1963 இல் மேலும் ஒரு பட்டத்தைப் பெற்றார். 1965 இல் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகக் கடமை புரிந்து 1970 இல் பகுதி நேர விரிவுரையாளராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் 1972 இல் நிரந்தர நியமனம் பெற்று அளுத்கம ஆசிரிய பயிற்சிக்கல்லூரியிலும் பின் 1973 இல் பதவி உயர்வுடன் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரயளராகவும் கடமையாற்றினார். 1975 இல் பிரெஞ்சு அரசின் மேற்படிப்பு புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டார். பிரான்சில் விஷி என்ற ஊரில் கவிலம் என்ற பள்ளிக்கூடத்தில் பிரெஞ்சு மொழியை 9 மாத காலம் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அதன் பின் பாரிசில் தன்துறை சார்ந்த மேற்படிப்பை மேற்கொண்டு அதில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கக் கூடிய பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார். இவரது இந்தப்படிப்பு சொபோரோ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதான எம்.எஸ்.சி. பட்டப்படிப்புக்குச் சமமானதாகும். 1977 இல் மீண்டும் பலாலிக்குத் திரும்பி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும் பின்னர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். பிரெஞ்சுத் தூதரகத்தின் பணிப்பின் பேரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியை 1979 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கற்பித்தார். அதேவேளை யாழ் கல்வி வலயம் 2 இல் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார். இவர் பிரெஞ்சு மொழியை யாழ்ப்பாணம் Alliance Francaise நிறுவனத்திலும் கற்பித்து வந்தார். இவர் பிரெஞ்சு மொழியை 25 வருடங்களாக கற்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செவாலியர் விருது

இவர் ஒக்டோபர் 2009 இல் கல்விக்காக செவாலியர் விருதினைப் பெற்றார். பிரெஞ்சு மொழியினை இலங்கையில் கற்பித்து, அம் மொழியினையும், பிரான்ஸ் நாட்டு கலாசார பங்களிப்பினையும் இலங்கையில் பல ஆண்டுகளாக பரப்பியதோடு, இவர் கல்வித் துறைக்கு ஆற்றிய சேவையை கௌரவிக்குமுகமாக பிரான்ஸ் நாட்டுக் கல்வி அமைச்சினால் (2009) இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதுவரின் இல்லத்தில் வைத்து, தூதரால் இந்த விருது இவருக்கு வழங்கப்பெற்றது.

வெளி இணைப்புகள்

செவாலியர் விருது பெற்ற ஈழத்தின் பெண்மணி