திருத்தந்தைத் தேர்தல் அவை 2013

திருப்பீடத் தேர்தல் அவை 2013 (Papal conclave of 2013) என்பது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2013, பெப்ருவரி 28ஆம் நாள் தம் திருத்தந்தைப் பணியைத் துறந்து "ஓய்வுபெற்ற திருத்தந்தை" (Pope Emeritus) என்னும் நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பின் திருச்சபையின் தலைவராகப் பதவி ஏற்க ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நிறைவேற்ற கூட்டப்படுகின்ற கர்தினால்மார் குழு ஆகும்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறத்தல்

2005ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 19ஆம் நாள் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற பதினாறாம் பெனடிக்ட் சுமார் 8 ஆண்டுகளாகத் திருத்தந்தைப் பணியை ஆற்றி, முதிர்ந்த வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக 2013, பெப்ருவரி 28ஆம் நாள் பணி துறந்தார்.

அதற்கு முன்னர், அவரே 2013, பெப்ருவரி 11ஆம் நாள் தாம் பணி துறக்கவிருப்பதை அறிவித்தது கத்தோலிக்க திருச்சபைக்கும் உலகம் முழுவதற்கும் ஓர் அதிர்ச்சிச் செய்தியாக அமைந்தது.

திருத்தந்தை பணி துறந்து ஒரு முழுநாள் நிறைவுற்றதும் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திருத்தந்தை பதவியிடம் வெறுமையாதல்

பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்ததை முன்னிட்டு திருத்தந்தை பதவியிடம் வெறுமையானது. அப்பதவியைப் புதிய திருத்தந்தை ஏற்பது வரை அக்காலியிடம் (sede vacante) நீடிக்கும். திருத்தந்தை பெனடிக்ட் பணிதுறந்த ஒரு முழுநாள் கடந்ததும், அதாவது மார்ச்சு மாதம் முதல் நாள் வத்திக்கான் நேரம் மாலை 8 மணியளவில், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கர்தினால்மார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் திருத்தந்தை பதவியிடம் பல மாதங்களாக, வருடங்களாக வெறுமையாக இருந்ததும் உண்டு. தற்போது சுமார் மூன்று வாரங்களுக்குள் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இடைக்காலத்தில் திருச்சபைப் பொறுப்பை ஏற்போர்

திருத்தந்தை பதவியிடம் காலியாக இருக்கின்ற இடைக்காலத்தில் திருச்சபையின் ஆட்சிப் பொறுப்பின் துறைத் தலைவர்களான அனைத்து கர்தினால்மார்களும் தம் பணிப்பொறுப்பை இழப்பர். மூன்று கர்தினால்மார் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்கள். அவர்கள்

  • திருச்சபை உச்ச நீதிமன்றத் தலைவர் (Major Penitentiary)
  • தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் (Camerlengo of the Holy Roman Church)
  • கர்தினால்மார் குழுவின் தலைவர் (Dean of the College of Cardinals)

பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தபோது திருச்சபை மைய அவையில் பதவி தொடர்வோர்:

  • திருச்சபை உச்ச நீதிமன்றத் தலைவர்: கர்தினால் மனுவேல் மொந்தேயிரோ தே காஸ்த்ரோ;
  • தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர்: கர்தினால் தார்ச்சீசியோ பெர்த்தோனே;
  • கர்தினால்மார் குழுவின் தலைவர்: கர்தினால் ஆஞ்செலோ சொதானோ.

இவர்கள் தவிர, உரோமை மறைமாவட்டத்தின் பதில்-ஆயர் கர்தினாலும், வத்திக்கான் நாட்டு பதில்-ஆயர் கர்தினாலும் தம் பொறுப்புகளைத் தொடர்வர்.

திருத்தந்தை ஆட்சிப்பீடம் காலியாகும்போது, உலகெங்கும் இருந்து கர்தினால்மார் உரோமைக்கு வருவர். அனைவரும் வந்ததும் ஒவ்வொரு நாளும் "பொதுக் குழு" (General Congregations) என்னும் அமைப்பாகக் கூடி, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான அவையைக் (Conclave) கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வர். இப்பொறுப்பு கர்தினால்மார் குழுவின் தலைவரைச் சாரும்.

மேலும் அவசர காரியங்கள் குறித்து முடிவுகள் எடுக்கும் தேவை எழுந்தால் கர்தினால்மார் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ தலைமையில் கூட்டம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது.

கர்தினால்மாரின் பொதுக் குழுக் கூட்டங்களில் எல்லா கர்தினால்மார்களுக்கும் பங்கேற்கும் உரிமை உண்டு. மாறாக, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடுகின்ற திருப்பீடத் தேர்தல் அவையின் கூட்டத்தில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமை 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்மார்களுக்கே உண்டு.

இடைக் காலத்தில் கர்தினால்மாரின் பணிப்பொறுப்பு

திருத்தந்தையின் பணியிடம் காலியாகும் இடைக்காலத்தில் கர்தினால்மார் ஆற்றும் முக்கிய பணி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தல் ஆகும்.

எல்லா கர்தினால்மார்களும் உரோமை வந்து சேர்ந்ததும் திருத்தந்தைத் தேர்தல் குழுக் கூட்டம் நிகழும். அக்கூட்டம் நடப்பதற்கு, திருப்பீடம் காலியாகி 15 நாள்கள் கழிந்திருக்க வேண்டும், ஆனால் 20 நாள்களைத் தாண்டல் ஆகாது. இந்த ஒழுங்குமுறையைத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தாம் பணி துறப்பதாக அறிவித்த பிறகு, 2013 பெப்ருவரி 22ஆம் நாள் ஒரு சொந்த அறிக்கை வழியாக மாற்றினார். அது பெப்ருவரி 25இல் வெளிபிடப்பட்டது. அதன்படி, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுள்ள அனைத்து கர்தினால்மார்களும் உரோமை வந்து சேர்ந்துவிட்டால், தேர்தல் குழுக் கூட்டம் பணியிடம் காலியான 15 நாள்களுக்கு முன்னரே கூட்டப்படலாம்.

இந்த மாற்றத்திற்கு ஏற்ப, 2013 மார்ச்சு 15ஆம் நாளுக்கு முன்னரே திருத்தந்தைத் தேர்தல் குழுக் கூட்டம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எல்லா கர்தினால்மார்களும் உரோமை வந்ததும், குழுவாகக் கூடி எந்த தேதியில் தேர்தல் கூட்டம் நடைபெறும் என்பதைப் பெரும்பான்மை வாக்கு அளித்து தீர்மானிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

திருத்தந்தை பெனடிக்ட் பதவி துறந்த நாளான 2013, பெப்ருவரி 28 காலையில் கர்தினால்மார்களுக்கு உரையாற்றியபோது கத்தோலிக்க திருச்சபையின் மொத்த எண்ணிக்கையான 208 கர்தினால்மார்களுள் 144 பேர் பங்கேற்றனர்.

தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளரான கர்தினால் தார்ச்சீசியோ பெர்த்தோனே வத்திக்கான் நகரின் ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்தார். மேலும் திருப்பீடம் சார்ந்த துறைகளின் சாதாரண நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாவார். பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்ததைத் தொடர்ந்து திருப்பீடம் காலியான உடனேயே பெர்த்தோனே திருத்தந்தை உறைவிடத்தை முத்திரையிட்டு அடைத்துவிட்டு, அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வத்திக்கானின் அயல் உறவுத் துறைத் தலைவர் என்ற முறையில் கர்தினால் பெர்த்தோனேயின் பணி முடிவுக்கு வந்தாலும், அவர் தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் என்னும் பொறுப்பில் தொடர்கிறார்.

கர்தினால்மார் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ கர்தினால்மார்களின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி அவற்றிற்குத் தலைமை தாங்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார். அவரே தேர்தல் குழு அவையையும் கூட்டும் பொறுப்புடையவராயினும், அவர் 80 வயதைத் தாண்டிவிட்டதாலும், அதனால் தேர்தல் குழு அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமையை இழந்துவிட்டதாலும், அவர் தேர்தலில் பங்கேற்கவில்லை. மாட்டார். மாறாக, அவருக்கு அடுத்த, 80 வயதுக்கு உட்பட்ட மூத்த கர்தினாலாகிய ஜொவான்னி பத்தீஸ்தா ரே என்பவர் அப்பொறுப்பை நிறைவேற்றினார்.

திருத்தந்தை தேர்தல் பற்றிய சில தகவல்கள்

  • புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்போர் யார்?

கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்மார் குழு, இரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும். வழக்கமாக, கர்தினால் குழுவிலிருந்து ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • திருத்தந்தைத் தேர்தல் நிகழும் இடம் யாது?

வத்திக்கான் நகரில், சிஸ்டைன் சிற்றாலயத்தில் (Sistine Chapel) புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் தேர்தல் குழு அவை நிகழும். இரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்மாருக்கு வயது வரம்பு உள்ளதா?

திருத்தந்தையின் இறப்பு அல்லது பணி துறப்பு காரணமாகத் திருப்பீடம் காலியாகும் நாளில் ஒரு கர்தினால் 80 வயது எய்திவிட்டால் அவர் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் திருத்தந்தைத் தேர்தல் அவை கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமையை இழப்பார் என்று 1975இல் திருத்தந்தை ஆறாம் பவுல் சட்டம் வகுத்திருந்தார். அதை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருத்தியமைத்து, திருப்பீடம் காலியான பின் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காகத் திருத்தந்தைத் தேர்தல் அவை கூடும் நாளில் எந்த கர்தினாலுக்கு 80வயது நிறைகிறதோ அவர் அத்தேர்தல் அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார் என்று சட்டம் வகுத்தார். அதுவே இப்போது நடைமுறையில் உள்ளது.

  • புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார்கள் எண்ணிக்கை குறித்து வரம்பு உளதா?

புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வயதினைக் கடக்காத கர்தினால்மார்களின் எண்ணிக்கை 120ஐத் தாண்டலாகாது என்றொரு ஒழுங்குமுறை 1975இல் இயற்றப்பட்டது. ஆயினும் சில வேளைகளில் அந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்ததும் உண்டு.

  • திருத்தந்தையின் இறப்பைத் தொடர்ந்து புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலை எழுந்தால், இறப்பை உறுதிப்படுத்துவது பற்றிய மரபு உளதா?

ஆம். மரபுப்படி, தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர், இறந்த திருத்தந்தையை அணுகி, நெற்றியில் ஒரு சிறு சுத்தியலால் மெதுவாகத் தட்டி, அவருடைய திருமுழுக்குப் பெயரைச் சொல்லி மூன்று முறை அழைப்பார். அதற்கு யாதொரு பதிலும் வரவில்லை என்றால், திருத்தந்தை இறந்துவிட்டார் என்று உறுதி செய்யப்படும். இந்த மரபுவழிச் சடங்கு கடைசி முறையாக நிகழ்த்தப்பட்டது 1903ஆம் ஆண்டு, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இறந்தபோது ஆகும். இந்த மரபு தற்போது கைவிடப்பட்டுவிட்டது. ஒருசில அலுவலர் முன்னிலையில் தூய உரோமைத் திருச்சபை ஆட்சியாளர் இறப்புச் சான்றிதழைத் தயாரிக்கும் செயல் மட்டுமே தற்போது உள்ளது. பின்னர், அடக்கச் சடங்குகளுக்கு ஏற்பாடாகும். புதிய திருத்தந்தைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும்.

  • திருத்தந்தையின் ஆட்சிக் கணையாழியை உடைக்கும் மரபு தொடர்கிறதா?

திருத்தந்தையின் ஆட்சிக் கணையாழிக்கு "மீனவரின் கணையாழி"(fisherman's ring) என்று பெயர். இயேசுவின் முக்கிய சீடரான புனித பேதுரு மீனவராய் இருந்தார் என்பதாலும், இயேசு அவரை நோக்கி, இதுவரை மீன்களைப் பிடித்த நீ இனிமேல் மனிதரைப் பிடிப்பாய் (காண்க: மாற்கு நற்செய்தி 1:17) என்று கூறியதாலும், பேதுருவின் வழிவருகின்ற திருத்தந்தை அணியும் ஆட்சி மோதிரம் இப்பெயர் பெற்றது. கடந்த காலத்தில், திருத்தந்தையின் இறப்புக்குப் பின் யாராவது அவருடைய கணையாழியைக் கொண்டு அதிகாரப்பூர்வ ஆணையேடுகளுக்கு முத்திரை வைத்துவிடலாகாது என்னும் எண்ணத்தில் அந்தக் கணையாழியை ஒரு சுத்தியலால் அடித்து நொறுக்கிவிடும் வழக்கம் இருந்தது. கணையாழியால் ஆவணங்கள்மீது முத்திரை இடும் பழக்கம் 1265இல் இருந்தே குறிப்பிடப்படுகிறது. இந்த விதத்தில் முத்திரை இடும் பழக்கம் 1842 வரை நடப்பில் இருந்தது. முத்திரை இடுவதற்குப் பயன்படுத்தாத காலத்திலும் திருத்தந்தைக்கு ஓர் ஆட்சி மோதிரம் அவர் பணிப்பொறுப்பு ஏற்கும் நாளில் வழங்கப்படும். இப்போது, திருத்தந்தை இறந்தால் அல்லது பணிதுறந்தால் அவரது "மீனவரின் கணையாழி" ஒதுக்கிவைக்கப்படுமே ஒழிய நொறுக்கப்படுவதில்லை.

  • தேர்தலில் இரகசியம் காக்கும் முறை என்ன?

திருத்தந்தைத் தேர்தல் மிகக் கடினமான இரகசிய முறையில் நிகழும். தேர்தல் நடக்கின்ற சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஒற்றுக்கேட்கும் கருவிகள் உளவா என்று துல்லியமாகப் பார்க்கப்படும். தேர்தலின்போது கர்தினால்மார்கள் வெளியுலகத்தோடு தொடர்புகொள்ள இயலாது. ஒவ்வொரு கர்தினாலும், அவர்களுக்குத் துணைசெய்வோரும் இரகசியம் காப்பதற்கான ஆணை செய்துகொள்ள வேண்டும். ஆணையை மீறுவோருக்குத் தண்டனை உண்டு. கர்தினால் அல்லாதோர் இரகசியம் பற்றிய ஆணையை மீறினால் உடனடியான சபைநீக்கத்துக்கு ஆளாவர். கர்தினால்மாருக்கு என்ன தண்டனை என்பது பற்றித் தனியாகக் குறிப்பிடப்படவில்லை.

  • புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வெளியுலகிற்கு எவ்வாறு அறிவிக்கப்படும்?

தேர்தல் நடக்கும்போது கர்தினால்மார் தாம் தேர்ந்தெடுக்க விரும்பும் கர்தினாலின் பெயரை ஒரு சீட்டில் எழுதுவார்கள். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் சீட்டுகள் எரிக்கப்படும். திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை அறிவிக்க கரும்புகை எழும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை அறிவிக்க வெண்புகை எழும்.

திருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற முறை

திருத்தந்தை ஒருவர் பதவி துறந்தாலோ, பதவிக் காலத்தில் இறந்தாலோ அவருக்குப் பின் பதவியேற்கும் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க திருச்சபையின் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் பல மாற்றங்களும் புகுத்தப்பட்டன.

இன்று வழக்கத்தில் இருக்கும் முறைப்படி கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்மார் மட்டுமே புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் கொண்டுள்ளார்கள்.

திருத்தந்தைத் தேர்தல் அவை 2013

திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார் - பெருநிலப்பகுதிகள் வாரியாக
  இத்தாலியா
28
  ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகள்
32
  வட அமெரிக்கா
20
  தென் அமெரிக்கா
13
  ஆப்பிரிக்கா
11
  ஆசியாவும் ஓசியானியாவும்
11
மொத்த கர்தினால்-வாக்காளர்கள் 115
பங்கேற்காத கர்தினால்-வாக்காளர்கள்
2
  • ஜூலியஸ் தர்மாத்மாத்ஜா, இந்தோனேசியாவின் ஜக்கார்த்தா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்
  • கீத் ஓப்ரையன், எசுக்காத்துலாந்தின் புனித அந்திரேயா மற்றும் எடின்பரோ உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்
ஓய்வுபெற்ற திருத்தந்தை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
புதிய திருத்தந்தை திருத்தந்தை பிரான்சிசு

திருத்தந்தைத் தேர்தல் 2013 தயாரிப்பு நடவடிக்கைகள்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான தயாரிப்புகள் தொடங்கின.

புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால் அவைக்குத் தலைமைதாங்கியவர் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா ரே என்பவர். கர்தினால் குழுத் தலைவரான ஆஞ்செலோ சோடானோ என்பவரும், கர்தினால் குழுவின் துணைத்தலைவரான கர்தினால் ரோஜர் எச்செகாரே என்பவரும் 80 வயதைத் தாண்டிவிட்டதால் தேர்தல் அவையில் பங்கேற்று வாக்களிக்க உரிமை இழந்துவிட்டதால் கர்தினால் ரே என்பவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கர்தினால் ரே 80 வயது நிரம்பாத கர்தினால்மார்களுள் மூத்தவர் என்ற அடிப்படையில் இத்தகுதியைப் பெற்றார்.

  • வயது பற்றிய சீர்திருத்தம்:

திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உரிமை 80 வயது நிரம்பாத கர்தினால்மார்களுக்கு மட்டுமே உண்டு என்னும் சட்டத்தை திருத்தந்தை ஆறாம் பவுல் இயற்றியிருந்தார். 1996இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தையின் பணியிடம் காலியான 15-20 நாள்களுக்குள் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவை கூட வேண்டும் என்று சட்டம் இயற்றினார்.

இருப்பினும், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாமாகவே முன்வந்து பணிதுறந்தது ஒரு புதிய நிகழ்வானதால் புதிய வழிமுறை தேவைப்பட்டது. திருத்தந்தை பெனடிக்ட் தாம் பணிதுறக்கப்போவதாக 2013, பெப்ருவரி 11ஆம் நாள் அறிவித்தார். அவ்வாறே பெப்ருவரி 28ஆம் நாள் பணிதுறந்தார். இதனால் வழக்கமாகத் திருத்தந்தை இறந்தபின் காலியாகின்ற இடத்தை நிரப்புவதற்குத் தேவையான நாள்களை விடக் குறைவான நாள்கள் போதும் என்றாயிற்று. மேலும், 2013ஆம் ஆண்டு திருச்சபையின் மிக முக்கிய நிகழ்வாகிய புனித வாரம் மார்ச்சு 24இல் தொடங்குவதால் அதற்கு முன் திருத்தந்தைத் தேர்தல் நடந்து முடிந்து புதிய திருத்தந்தை பொறுப்பு ஏற்பதும் தேவை என்று பட்டது.

ஆக, 2013, பெப்ருவரி 25ஆம் நாள் பதினாறாம் பெனடிக்ட் ஒரு மாற்றம் கொணர்ந்தார். அதன்படி, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கர்தினால்-வாக்காளர்கள் அனைவரும் உரோமைக்கு வந்ததும், அவர்கள் தேர்தல் நாளைக் குறிக்கும்போது ஒருசில நாள்கள் முன்னதாகத் தேர்தல் நிகழ ஏற்பாடு செய்யலாம் என்றாயிற்று. இதன்படி, கர்தினால்மார் ஒன்றுகூடி, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நாளினைக் குறித்தார்கள்.

  • திருத்தந்தைத் தேர்தல் நிகழும் நாள்: மார்ச்சு 12, 2013:

பதினாறாம் பெனடிக்டிக்குப் பின் திருத்தந்தையாகப் பொறுப்பேற்பவரைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால் அவை 2013, மார்ச்சு 12ஆம் நாள் கூடும் என்று கர்தினால்மார் முடிவுசெய்தனர்.

  • 2013 திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்வோர் யார்?

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணிதுறந்த நாளாகிய 2012, பெப்ருவரி 28ஆம் நாள் உலகத்தில் 207 கர்தினால்மார் இருந்தனர். அவர்களுள் திருத்தந்தைப் பணியிடம் காலியாவதற்கு முந்தின நாள் யார்யார் 80 வயது நிரம்பாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமை கொண்டிருந்தனர். இது திருத்தந்தை ஆறாம் பவுல் இயற்றிய சட்டம் ஆகும். அதைத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மாற்றியமைத்து, திருத்தந்தைத் தேர்தல் அவை கூடுவதற்கு முன்னால் 80 வயது நிரம்பிய கர்தினால்மார் அந்த அவையில் பங்கேற்க உரிமை இல்லை என்று சட்டம் இயற்றினார்.

இவ்வாறு 2013 திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்க 117 கர்தினால்மார்கள் உரிமை கொண்டிருந்தனர். இவர்களுள் இருவர் வெவ்வேறு காரணங்களுக்காகத் தாம் தேர்தல் அவையில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தனர். ஒருவர் இந்தோனேசியாவின் ஜாக்கார்த்தா உயர்மறைமாவட்டத்தின் பேராயரான ஜூலியஸ் தர்மாத்மாத்ஜா என்னும் கர்தினால். அவருக்குக் கண்பார்வை குறைந்துபோனது காரணமாகக் காட்டப்பட்டது. மற்றொருவர் எசுக்காத்துலாந்து நாட்டின் புனித அந்திரேயா மற்றும் எடின்பரோ உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயரான கீத் ஓப்ரையன் என்னும் கர்தினால் ஆவார். இவர் தாம் தேர்தலில் பங்கேற்க வந்தால் அது தம்மீது கவனத்தை ஈர்க்கும் தருணமாகிவிடும் என்று கூறினார்.

2013 திருத்தந்தைத் தேர்தலுக்கான தொடக்கக் கூட்டங்கள்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தாம் பணிதுறக்கப்போவதாக அறிவித்ததிலிருந்து கர்தினால்மார் உரோமை வரத் தொடங்கினார்கள். 2013, பெப்ருவரி 28ஆம் நாள் அவர் பதவி விலகியதிலிருந்து பெரும்பான்மையான கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவையில் கலந்துகொள்ள உரோமை வந்தனர்.

திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்க உரோமை வருமாறு கர்தினால்மார்களுக்கு அழைப்பு 2013, மார்ச் முதல்நாள் விடுக்கப்பட்டது.

  • முதல் பொதுக்குழுக் கூட்டம்:

எண்பது வயதுக்கு உட்பட்ட மற்றும் மேற்பட்ட அனைத்து கர்தினால்மாரும் பங்கெடுக்க உரிமை கொண்ட குழுக் கூட்டங்கள் பொதுக் குழுக் கூட்டங்கள் ஆகும். இவை 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்மார் மட்டுமே பங்கேற்கின்ற திருத்தந்தைத் தேர்தல் அவைக் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்றன. இக்கூட்டங்களில் கர்தினால்மார் பொதுவாக திருச்சபையின் நிலைமையையும் அது இன்றைய உலகில் சந்திக்கின்ற சிக்கல்களையும் குறித்து விவாதித்தனர். அதோடு இன்றைய சூழ்நிலைகளில் யார் திருத்தந்தையாகப் பொறுப்பேற்பது வரவேற்கத்தக்கது என்பது குறித்தும் உரையாடல் நிகழ்த்தினர்.

முதல் பொதுக்குழுக் கூட்டம் 2013, மார்ச் 4ஆம் நாள் திங்கள் காலை நடைபெற்றது. அதற்கு முன்னர், பெப்ருவரி 28ஆம் நாளிலேயே, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால் அவை பெரும்பாலும் மார்ச்சு 11ஆம் நாள் கூடலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

திருத்தந்தைத் தேர்தல் குழு கூடி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் இடமாகிய சிஸ்டைன் சிற்றாலயம் மார்ச்சு 5ஆம் நாள் காலையில் கூட்டத் தயாரிப்புகளுக்காக மூடப்பட்டது. என்றாலும், எந்த நாளில் திருத்தந்தைத் தேர்தல் குழு கூடி வாக்கெடுப்பு நடத்தும் என்பது வாக்களிக்க உரிமை கொண்ட எல்லா கர்தினால்மார்களும் உரோமை வந்து சேர்ந்து பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து முடிவெடுப்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

போலந்தின் வார்சா உயர்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் கசிமீரஸ் நீச் மார்ச் 7ஆம் நாள் வியாழக்கிழமை காலையில் நடந்த ஐந்தாம் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் உரோமை வந்து சேர்ந்தார். அதன்பின் இறுதியாக, வியட்நாமின் ஹோ சி மின் நகர் உயர்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் ழான்-பாப்தீஸ்த் பாம் மின் மான் என்பவரும் மார்ச்சு 7ஆம் நாள் மாலையில் உரோமை வந்து சேர்ந்தார். இவ்வாறு, திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ளும் உரிமைகொண்ட அனைத்து 115 கர்தினால்மாரும் உரோமை வந்து சேர்ந்து தீர்மானித்ததைத் தொடர்ந்து திருத்தந்தைத் தேர்தல் அவை கூடும் நாள் அறிவிக்கப்பட்டது.

கூடி வந்த கர்தினால்மார்கள் ஒருவரை ஒருவர் அறிந்து, பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. தேர்தலில் வாக்காளர்களாகப் பங்கேற்கின்ற 115 கர்தினால்மார்களுள் 17 பேர் டுவிட்டர் சமூகத் தொடர்பு ஊடகம் பயன்படுத்துவோர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுள் பலர் டுவிட்டர் செய்தி அனுப்பி வெளியுலகோடு தொடர்புகொண்டிருந்தனர். சிலர், குறிப்பாக அமெரிக்க கர்தினால்மார், நேர்காணல் வழி செய்திகள் வழங்கினார்கள். ஆயினும், கர்தினால்மார் தங்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் எப்பொருள் பற்றி விவாதித்தார்கள் என்பது குறித்து செய்திகள் வெவ்வேறு விதங்களில் வெளிவரத்தொடங்கியதால் செய்திப்பகிர்வுக்குத் தடை விதிக்கப்பட்டது. வத்திக்கானின் அதிகாரப்பூர்வ தகவலாளர் மட்டுமே செய்தி வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

கர்தினால்மார்களின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தின்போது (2013, மார்ச்சு 4, திங்கள் கிழமை காலை) விவாதிக்கப்பட்ட பொருள்கள்: புது நற்செய்தியறிவிப்புப் பற்றிய அண்மைய ஆயர் மன்றம், திருத்தந்தை பெனடிக்டுக்கு ஒரு பாராட்டுத் தந்தி அனுப்புதல், திருச்சபை ஆட்சித் தலைவருக்கு (Camerlengo) தேர்தல் சமயத்தில் துணைபுரிய 3 கர்தினால்களைத் தேர்ந்தெடுத்தல். அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் 13 கர்தினால்மார்கள் உரையாற்றினர்.

  • இரண்டாம் பொதுக்குழுக் கூட்டம்:

மார்ச்சு 4ஆம் நாள் மாலையில் இரண்டாம் பொதுக்குழுக் கூட்டம் நிகழ்ந்தது. சட்டப்படி கர்தினால்மாருக்கு ஆற்றப்பட வேண்டிய இரு உரைகளுள் முதலாம் உரை அப்போது அருள்திரு ரனியேரோ காந்தாலாமேஸ்ஸா என்பவரால் வழங்கப்பட்டது. 9 கர்தினால்மார்களும் உரையாற்றினர்.

  • மூன்றாம் பொதுக்குழுக் கூட்டம்:

இக்கூட்டம் மார்ச்சு ஐந்தாம் நாள் செவ்வாய் காலையில் நடைபெற்றது. அதுபோழ்து 11 கர்தினால்மார் உரையாற்றினர். அதோடு ஆறு பெருநிலப்பகுதிகளிலிருந்தும் வந்த கர்தினால்மார்களின் பிரதிநிதிகள் உரைகள் நிகழ்ந்துவிட்டிருந்தன. பதினாறாம் பெனடிக்டிக்குப் பாராட்டுத் தந்திச் செய்தி அனுப்பப்பட்டது. மேலும் நடக்கவிருக்கின்ற திருத்தந்தைத் தேர்தல் அவை தொடர்பான ஒழுங்குகள் வாசித்தளிக்கப்பட்டன. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள்: உலக ஆயர்களுக்கும் திருப்பீடத்துக்கும் உள்ள உறவுகள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்த்திற்குப் பிறகு திருச்சபையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, இன்றைய உலகில் திருச்சபை, புது நற்செய்தியறிவிப்பு.

செவ்வாய் மாலையில் திருத்தந்தைத் தேர்தல் நடைபெறவிருக்கின்ற இடமான வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கர்தினால் வாக்காளர்கள் அளிக்கும் வாக்குச்சீட்டுகளை எரித்து கரும்புகை அல்லது வெண்புகை எழுப்புவதற்குப் பயன்படும் இரு எரிஅடுப்புகள் நிறுவப்பட்டன.

  • நான்காம் பொதுக்குழுக் கூட்டம்:

மார்ச்சு 6ஆம் நாள் புதன் காலையில் இக்கூட்டம் நடைபெற்றது. முதலில் கர்தினால்மார்கள் காலை இறைவேண்டல் நிகழ்த்தினார்கள். அன்று பிறந்த நாளைக் கொண்டாடிய மூன்று கர்தினால்மார்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 18 கர்தினால்மார் உரையாற்றினர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்னும் வந்துசேர வேண்டிய இரு கர்தினால்களைத் தவிர மற்று அனைத்து கர்தினால்மாரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விவாதப் பொருள்கள்: இன்றைய உலகில் திருச்சபை; புது நற்செய்தியறிவிப்பின் கோரிக்கைகள்; உரோமைத் தலைமைப் பீடத்தின் பல்வேறு துறைகள், பேராயங்கள், ஆணைக்குழுக்கள், கல்விநிறுவனங்கள்; ஆயர்களோடு உறவுகள்; புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்ற திருத்தந்தையிடம் துலங்கவேண்டிய பண்புகள்.

புதன் மாலையில் புனித பேதுரு பெருங்கோவிலில் இறைவேண்டல் நடந்தது.

  • ஐந்தாம் பொதுக்குழுக் கூட்டம்:

கர்தினால்மார்களின் ஐந்தாம் பொதுக்குழுக் கூட்டம் மார்ச்சு 7ஆம் நாள் வியாழன் காலை நடந்தது. தேர்தலின்போது திருச்சபை ஆட்சித்தலைவருக்குத் துணைசெய்ய மேலும் மூன்று கர்தினால்மார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெனெசுவேலா நாட்டு அதிபரான ஊகோ சாவெசின் மறைவுக்கு அனுப்பப்பட்ட இரங்கற்செய்தி வாசிக்கப்பட்டது. வத்திக்கானின் மூன்று நிதித்துறைகளின் தலைவர்களான மூன்று கர்தினால்மார் உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து 13 கர்தினால்மார் உரைநிகழ்த்தினர். குறிப்பாக கிறித்தவ ஒன்றிப்பு, திருச்சபை ஏழைகளுக்கு ஆற்றும் பணி போன்றவை விவாதிக்கப்பட்டன.

  • ஆறாம் பொதுக்குழுக் கூட்டம்:

வியாழன் மாலை நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கர்தினால்-வாக்காளர்களுள் கடைசியாக உரோமை வந்துசேர்ந்த வியட்நாம் கர்தினாலும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இவ்வாறு கர்தினால்-வாக்காளர் அனைவரும் (115) பிற கர்தினால்மார்களோடு கூட்டத்தில் கலந்துகொண்டனர். 16 கர்தினால்மார் உரையாற்றினர்.

இதற்கிடையில் அமெரிக்க கர்தினால்மார் செய்தி ஊடகத் தொடர்பாளர்களோடு உரையாடி, திருச்சபையின் நிலைபற்றி விரிவாக விவாதிக்க இன்னும் சில நாள்கள் தேவைப்படும் என்றும், திருத்தந்தைத் தேர்தலுக்கு முன் கர்தினால்மார் ஒருவர் ஒருவரை நன்கு அறிய வாய்ப்புகள் வேண்டும் என்றும் கூறினர்.

  • ஏழாம் பொதுக்குழுக் கூட்டம்:

இக்கூட்டம் 2013, மார்ச்சு 8ஆம் நாள் வெள்ளி காலை நிகழ்ந்தது. திருத்தந்தைத் தேர்தல் அவையில் கலந்து வாக்களிக்க இயலவில்லை என்று கூறிய இரு கர்தினால்மார்களின் வேண்டுகோளைக் கர்தினால்மார் குழு ஏற்றது. அந்த இரு கர்தினால்மார்: ஜக்கார்த்தா பேராயர் கர்தினால் ஜூலியஸ் தர்மாத்மாத்ஜா, எடின்பரோ பேராயர் கீத் ஓப்ரையன் ஆகியோர்.

திருத்தந்தைத் தேர்தலில் கலந்து வாக்களிக்க உரிமை பெற்ற அனைத்து கர்தினால்மார்களும் (115 பேர்) ஏற்கெனவே உரோமைக்கு வந்துவிட்டதால் தேர்தல் நிகழும் நாளைக் குறிக்கும் தருணம் வந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள்: பல்சமய உரையாடல்; உலகில் நீதியை நிலைநாட்டுவதில் திருச்சபையின் பொறுப்பு; மனித உயிர் தொடர்பான அறநெறி; அன்பிலும் மகிழ்ச்சியிலும் பரிவிலும் நற்செய்தியறிவிப்பு; திருச்சபையில் பெண்களின் இடமும் பணியும்; திருச்சபையில் கூட்டுணர்வு.

  • எட்டாம் பொதுக்குழுக் கூட்டம்:

மார்ச்சு 8ஆம் நாள் வெள்ளி மாலையில் நிகழ்ந்த இக்கூட்டத்தில் மொத்தம் 145 கர்தினால்மார் கலந்துகொண்டனர். புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நாளைக் குறிக்குமாறு கர்தினால் குழுத் தலைவர் கேட்டார். மிகப் பெரும்பான்மையான வாக்குகளோடு, திருத்தந்தைத் தேர்தல் அவை 2013, மார்ச்சு 12ஆம் நாள் செவ்வாய்க் கிழமையன்று சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் என்று முடிவுசெய்யப்பட்டது. கூட்டத்தின்போது 15 கர்தினால்மார் உரையாற்றினர்.

  • ஒன்பதாம் பொதுக்குழுக் கூட்டம்:

இக்கூட்டம் 2013, மார்ச்சு 9ஆம் நாள் சனிக்கிழமை காலை நிகழ்ந்தது. திருத்தந்தைத் தேர்தல் அவை கூடவிருக்கின்ற நாளாகிய மார்ச்சு 12ஆம் நாள் காலையில் எல்லா கர்தினால்-வாக்காளர்களும் தாங்கள் தங்கியிருக்கின்ற இடங்களிலிருந்து வத்திக்கான் நகர எல்லைக்குள் அமைந்துள்ள புனித மார்த்தா இல்லம் என்னும் வந்துவிட வேண்டும் என்றும், தேர்தல் வழியாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர்கள் அந்த இல்லத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் கர்தினால் குழுத் தலைவர் அறிவித்தார். பின்னர் புனித மார்த்தா இல்லத்தில் யார்யார் எந்தெந்த அறையில் தங்குவது என்பது சீட்டுக் குலுக்கல் முறையில் நிர்ணயிக்கப்பட்டது.

கூட்டத்தில் 17 கர்தினால்மார் உரையாற்றினர். இவ்வாறு, கர்தினால்மார்களின் ஒன்பது பொதுக்குழுக் கூட்டங்களிலும் மொத்தம் 133 உரைகள் ஆற்றப்பட்டன.

விவாதிக்கப்பட்ட பொருள்கள்: உரோமைத் தலைமைச் செயலகத்தில் சீர்திருத்தம் கொணர்தல்; புதிய திருத்தந்தையிடம் துலங்கவேண்டிய பண்புகள்.

கர்தினால் குழுத்தலைவர் திருத்தந்தைத் தேர்தல் நிகழவிருக்கும் மார்ச்சு 12ஆம் நாள் காலை 10 மணிக்கு தேர்தல் நன்முறையில் நிகழ இறைவனை வேண்டிட புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிகழும் என்று அறிவித்தார். அத்திருப்பலியைக் கர்தினால் குழுத் தலைவர் தலைமைதாங்கி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

பிற்பகலில், வத்திக்கான் திருத்தந்தை இல்லத்தோடு இணைந்த புனித பவுல் சிற்றாலயத்தில் கர்தினால்-வாக்காளர்கள் கூடி, தேர்தல் நிகழும் இடமாகிய சிஸ்டைன் சிற்றாலயம் நோக்கி 4:30 மணிக்கு பவனியாகச் செல்வார்கள். அப்போது எல்லாப் புனிதர் பிரார்த்தனையையும் தூய ஆவியின் துணையை இறைஞ்சி, வருக தூய ஆவியே என்னும் பாடலையும் இலத்தீனில் இசைப்பார்கள்.

மார்ச்சு 11ஆம் நாள், திங்கள் காலையில் இறுதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பிற அறிவிப்புகள்: மார்ச்சு 10ஆம் நாள் ஞாயிறன்று, கர்தினால்மார் தமக்கென்று ஒதுக்கப்பட்ட உரோமைக் கோவில்களில் திருப்பலி நிறைவேற்றுவர். திருத்தந்தைத் தேர்தல் நிகழும்போது கர்தினால்மாருக்குத் துணையாகச் செயல்படும் அனைவரும் இரகசியம் காப்பதாக உறுதிமொழி எடுக்கும் சடங்கு, மார்ச்சு 11ஆம் நாள் திங்கள் மாலை 5:30 மணிக்கு புனித பவுல் சிற்றாலயத்தில் நிகழும்.

திருத்தந்தையின் அதிகாரத்தின் சின்னமாகிய மீனவர் கணையாழி என்னும் மோதிரமும் அந்த மோதிரச் சின்னத்தின்படி அமைந்த முத்திரையும் வேறு அதிகாரப்பூர்வ முத்திரைகளும் நொறுக்கப்பட மாட்டா எனவும், ஆனால் அவற்றின்மீது சிறிய எழுத்தாணி கொண்டு சிலுவை அடையாளம் வரையப்பட்டு அவை இனிமேல் பயன்பட முடியாமல் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவருக்கு மீனவர் கணையாழியும் முத்திரைகளும் புதிதாக உருவாக்கப்படும்.

மார்ச்சு 9ஆம் நாள் சனிக்கிழமை காலையில் சிஸ்டைன் சிற்றாலயத்தின் வெளிக்கூரையில் புகைக் கூண்டு நிறுவப்பட்டது. இந்தப் புகைக்கூண்டு வழியாக வெளிவரும் கரும்புகை அல்லது வெண்புகையைக் கண்டு மக்கள் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டாரா அல்லது இன்னும் தேர்தல் முடியவில்லையா என அறிந்துகொள்வார்கள். திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும் வெண்புகையும் தேர்ந்தெடுக்கப்படாத வாக்கெடுப்பின் பின் கரும்புகையும் புகைக்கூண்டின் வழி வெளியேற்றப்படும்.

  • இறுதிப் பொதுக்குழுக் கூட்டம்:

2013, மார்ச்சு 11ஆம் நாள் திங்கள் காலையில் கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் அடுத்த நாள் நுழைவதற்கு முன்னதாகப் பத்தாவதும் இறுதியானதுமான பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மார்ச்சு 11ஆம் நாள் நடந்த இந்த இறுதிப் பொதுக்குழுக் கூட்டத்தில் 28 கர்தினால்மார் உரையாற்றினர். இவ்வாறு, 2013, மார்ச்சு 4ஆம் நாள், திங்கள் கிழமை தொடங்கி ஒரு வாரமாக, பத்து பொதுக்குழுக் கூட்டங்களில் மொத்தம் 150க்கும் அதிகமான கர்தினால்மார் உரையாற்றினர்.

வத்திக்கானின் மைய அலுவலத்தின் செயல்முறை சீர்திருத்தப்பட வேண்டும் என்று பல கர்தினால்மார் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, திருச்சபை ஆட்சியாளரான கர்தினால் தார்ச்சீசியோ பெர்த்தோனே வத்திக்கான் வங்கியில் ஊழல் நடந்தது என்று கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

இன்னும் பல கர்தினால்மார் உரையாற்ற முன்கூட்டியே பெயர் கொடுத்திருந்தனர். எனவே, திங்கள் பிற்பகலில் மற்றொரு பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாமா என்று கேட்டதற்கு, அத்தகைய கூடுதல் அமர்வு தேவையில்லை என்று பெரும்பான்மைக் கர்தினால்மார் கருத்துத் தெரிவித்தனர்.

மாறாக, மார்ச்சு 11 பிற்பகலில் கர்தினால்மார் தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரை சந்தித்து, புதிய திருத்தந்தையாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று உரையாடினர்.

  • மார்ச்சு 12இல் திருத்தந்தைத் தேர்தலுக்கு முந்திய அண்மை ஏற்பாடுகள்:

கீழ்வரும் அறிவிப்புகள் வழங்கப்பட்டன: திருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற 2013, மார்ச்சு 12ஆம் நாள் காலை 7 மணிக்கு எல்லா 115 கர்தினால்-வாக்காளர்களும் புனித மார்த்தா இல்லம் சென்று தத்தம் அறைகளைப் பார்ப்பார்கள். காலை 10 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார்கள். அதன்பின் மாலை 4:30 மணிக்கு சிஸ்டைன் சிற்றாலயத்திற்குப் பவனியாகப் போவார்கள். தொடர்ந்து அச்சிற்றாலயத்தில் திருத்தந்தைத் தேர்தல் நடைபெறும்.

முதல் வாக்கெடுப்பு அமர்வு முடிந்ததும் சுமார் 7:30 மணியளவில் கர்தினால்மார் தம் அறைகளுக்குத் திரும்புவதாகத் திட்டம். ஆனால், வத்திக்கான் செய்தி அறிவிப்பாளரான அருள்திரு ஃபெடெரீக்கோ லொம்பார்டி கூற்றுப்படி, 2005இல் நடந்த திருத்தந்தைத் தேர்தலின்போது முதல் வாக்கெடுப்பு அமர்வில் முடிவு ஏற்படாததைத் தொடர்ந்து கரும்புகை வெளியாகும்போது மணி 8 ஆகிவிட்டது.

திருத்தந்தைத் தேர்தலில் முன்னணி கர்தினால்மார் பலர் இருந்ததால், இம்முறை முதல் வாக்கெடுப்பு அமர்வில் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு குறைவே என்னும் கருத்து நிலவியது. கர்தினால்-வாக்காளர் நடுவே இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளதாகக் கூறப்பட்டது. வத்திக்கான் மைய அலுவலகத்தின் செயல்பாடு குறித்து ஆழ்ந்த சீர்திருத்தம் தேவை என்று கூறுவோர் மிலான் உயர்மறைமாவட்டப் பேராயரான கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா என்பவருக்கு ஆதரவு அளித்ததாக செய்தி ஊடகங்கள் கூறின. வத்திக்கானின் மைய அலுவலகத்தில் பணிபுரிவோர் பிரேசில் நாட்டு சான் பவுலோ உயர்மறைமாவட்டப் பேராயரான ஒடீலோ ஷேரர் என்பவரை ஆதரித்ததாகக் கூறப்பட்டது. ஷேரர் வத்திக்கான் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வட அமெரிக்காவின் கனடாவைச் சேர்ந்த கர்தினால் மார்க் உல்லேட், நியூயார்க் பேராயர் திமத்தி டோலன், பாஸ்டன் உயர்மறைமாவட்டப் பேரயர் ஷான் ஓமாலி போன்றோரும், தேர்தலின் முதல் நாளில் வாக்குகள் பெறுவர் என்று கூறப்பட்டது.

மார்ச்சு 13, புதன் கிழமையிலிருந்து ஒவ்வொரு நாளும் காலையில் ஓர் அமர்வு, பிற்பகலில் ஓர் அமர்வு என்று இரு வாக்கெடுப்பு அமர்வுகள் நிகழும். ஒவ்வொரு அமர்வின்போதும் இரண்டு தடவை வாக்கெடுப்பு நடக்கும். அப்போது கர்தினால் ஸ்கோலா மற்றும் கர்தினால் ஷேரர் ஆகியோர் படிப்படியாக அதிக வாக்குகள் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு மூன்றில் இரு பங்கு வாக்குகள் கிடைக்கின்றனவே (115 வாக்குகளில் குறைந்தது 77) அவரே புதிய திருத்தந்தை ஆவார்.

மேற்கூறிய இருவரில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால் மூன்றாம் கர்தினால் ஒருவருடைய பெயர் முன்னுக்கு வரும். அவர் இரு தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு நடுநிலை நபராக இருப்பார் என்பது செய்தி ஊடகங்களின் கணிப்பு.

திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்-வாக்காளர்களுக்குப் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர், ஊர்தி ஓட்டுநர், சலவையாளர், சமையலாளர் போன்ற சுமார் 90 பேர், தேர்தல் அவையில் நிகழ்வதை இரகசியமாகக் காப்பதாக மார்ச்சு 11, திங்கள் பிற்பகலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

2013 திருத்தந்தைத் தேர்தலின் முதல் நாள்

நாள் ஓட்டெடுப்பு முடிவு
1 1 யாரும் திருத்தந்தையாக தேர்வு செய்யப்படவில்லை
2 2
3
4
5 திருத்தந்தை தேர்வு செய்யப்பட்டார்
  • 2013, மார்ச்சு 12, செவ்வாய் - திருத்தந்தைத் தேர்தலுக்கான திருப்பலி:

இன்று காலை, வத்திக்கான் நேரம் 10:00 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் குழுத்தலைவர் ஆஞ்செலோ சொடானோ தலைமையில் எல்லா கர்தினால்மார்களும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக இறைவேண்டல் செய்யும் வண்ணம் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்கள். அத்திருப்பலியில் 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்-வாக்காளர்களும், தேர்தலில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமையை இழந்துபோன 80 வயதுக்கு மேற்பட்ட கர்தினால்மார்களும் கலந்துகொண்டனர். புனித பேதுரு பெருங்கோவிலின் மைய பீடத்தைச் சூழ்ந்து கர்தினால்மார் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின் வரிசையில் ஆயர்கள், குருக்கள், துறவியர் அமர்ந்திருந்தனர். கோவில் முழுவதும் மக்களால் நிறைந்து வழிந்தது.

திருப்பலியின் பெரும்பகுதியும் இலத்தீன் மொழியில் இருந்தாலும் பிற மொழிகளும் பயன்படுத்தப்பட்டன. திருவிவிலியத்திலிருந்து முதல் வாசகம் ஆங்கிலத்திலும், பதிலுரைப் பாடல் இத்தாலியத்திலும், இரண்டாம் வாசகம் எசுப்பானியத்திலும், நற்செய்தி வாசகம் இலத்தீனிலும் அறிக்கையிடப்பட்டன.

பின்னர் திருப்பலிக்குத் தலைமைதாங்கிய கர்தினால் ஆஞ்செலோ சொடானோ இத்தாலியத்தில் மறையுரை ஆற்றினார். அப்போது அவர் திருத்தந்தைப் பணியைத் துறந்து ஓய்வெடுக்கின்ற பதினாறாம் பெனடிக்ட் திருச்சபைக்கும் உலகுக்கும் ஆற்றிய பணியைப் புகழ்ந்து, நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறியது:

தற்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தில் இருக்கிறோம். தம் தூய ஆவியின் வல்லமையால் திருச்சபையை வரலாற்றில் வழிநடத்திவரும் ஆண்டவர் இங்கே கூடியிருக்கின்ற கர்தினால்மார்கள் வழியாகத் தம் திருச்சபைக்கு ஒரு நல்ல ஆயரை விரைவில் அளிக்கவேண்டும் என்று இறைஞ்சுகிறோம்

மறையுரைக்கும் விசுவாச அறிக்கைக்கும் பின்னர் நிகழ்ந்த பொது மன்றாட்டுகள் பல மொழிகளில் வாசிக்கப்பட்டன. அவற்றுள் பிரஞ்சு, சுவாகிலி, போர்த்துகீசியம், மலையாளம், செருமானியம் போன்ற மொழிகளும் அடங்கும்.

ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் செயலராகப் பணிபுரிந்த ஜோர்ஜ் கேன்வைன் என்னும் பேராயரும் திருப்பலியில் கலந்துகொண்டார். அவர் 2013, பெப்ருவரி 28ஆம் நாள் ஓய்வுபெற்ற பதினாறாம் பெனடிக்டோடு காஸ்டல் கண்டோல்ஃபோ கோடையில்லத்திற்குச் சென்றபின் இதுவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை.

பேராயர் கேன்வைனை பதினாறாம் பெனடிக்ட் "திருத்தந்தை இல்லத்தின் தலைவர்" என்னும் பதவிக்கு உயர்த்தியதால் அப்பதவியின் அடிப்படையில் பேராயர் கேன்வைன் இன்று மாலையில் நடைபெறுகின்ற திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்கும் கர்தினால்மார்கள் உறுதிமொழி அளிக்கும் சடங்கில் உதவிசெய்ய சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. . அதன்பிறகு அங்கிருந்து வெளியேறுவார். புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, புனித பேதுரு பெருங்கோவிலின் மேல் சாளரத் தளத்தில் வந்து மக்களுக்கு வாழ்த்துக் கூறி ஆசிர் வழங்குகின்ற வேளையில் பேராயர் கேன்வைன் தம் பணித்தகுதியின் அடிப்படையில் திருத்தந்தைக்கு அருகே நிற்பார். அதன் பிறகு, வத்திக்கானிலும், உரோமை நகரிலும் இத்தாலி நாட்டிலும் திருத்தந்தை கலந்துகொள்ளும் எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் அவரோடு இருப்பார்.

காலையில் நடந்த கூட்டுத்திருப்பலியின்போது தலைமைதாங்கிய கர்தினால் குழுத் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ சொடானோவுக்கு அருகில் நின்று சிறப்புப் பங்கேற்றோர் கீழ்வரும் நான்கு கர்தினால்மார் ஆவர்: தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர் கர்தினால் தார்ச்சீசியோ பெர்த்தோனே; கர்தினால்-ஆயர் குழுவில் மூத்தவர் கர்தினால் பத்தீஸ்தா ரே; கர்தினால்-குரு குழுவில் மூத்த கர்தினால் டான்னீல்ஸ் காட்ஃப்ரீட், மற்றும் கர்தினால்-திருத்தொண்டர் குழுத் தலைவர் கர்தினால் ழான்-லூயி டவுரான் ஆகியோர்.

கூட்டுத் திருப்பலியின்போது மக்களுக்கு தூய நற்கருணை வழங்குவதற்கு 110 குருக்கள் துணைசெய்தனர். கூட்டுத் திருப்பலி 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்தது.

  • 2013, மார்ச்சு 12, செவ்வாய் - திருத்தந்தைத் தேர்தல் தொடங்குகிறது:

இன்று பிற்பகல் வத்திக்கான் நேரம் மாலை 4:34 மணிக்கு கர்தினால்-வாக்காளர்கள் வத்திக்கானில் உள்ள புனித பவுல் சிற்றாலயத்தில் ஒன்றுகூடி, அங்கிருந்து தேர்தல் நடைபெறும் தளமாகிய சிஸ்டைன் சிற்றாலயம் நோக்கிச் செல்ல பவனி தொடங்கினார்கள். பவனியின்போது அனைத்து புனிதர் பிரார்த்தனையை இலத்தீன் மொழியில் பாடிச் சென்றார்கள். புனிதர் பட்டியலில் 150 மன்றாட்டுகள் இருந்தன. பின்னர் "வருக தூய ஆவியே" என்னும் பாடலைப் பாடி, தாம் பங்கேற்கவிருக்கும் வாக்கெடுப்பில் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தூய ஆவியை இறைஞ்சி பாடி, சிஸ்டைன் சிற்றாலயத்தை நோக்கிச் சென்றார்கள்.

பவனியாகச் சென்ற கர்தினால்-வாக்காளர்கள் மாலை 5 மணியளவில் கர்தினால்-வாக்காளர்கள் சிஸ்டைன் சிற்றாலயம் சென்றடைந்தார்கள். அங்கு திருத்தந்தைத் தேர்தல் அவைக்குத் தலைமை தாங்குகின்ற கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா ரே இரகசியம் காப்பதற்கான உறுதிமொழியை இலத்தீனில் வாசித்தார். அவரோடு சேர்ந்து ஒவ்வொரு கர்தினால்-வாக்காளரும் அந்த உறுதிமொழியை வாசித்தனர். நற்செய்தி நூல்களைத் தொட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாலை 5:31 - உறுதிமொழி எடுக்கும் சடங்கு முடிந்தது. திருத்தந்தை வழிபாட்டுக் குழுத் தலைவர் மொன்சிஞ்ஞோர் குயிதோ மரீனி என்பவர் உரத்த குரலில், Extra Omnes என்று இலத்தீனில் கட்டளையிட்டார். அதற்கு, அனைவரும் வெளியேறுக என்று பொருள். கர்தினால்-வாக்காளர்களையும் அவையில் கர்தினால்மாருக்குத் துணையாக நிற்போர் ஒருசிலரையும் தவிர அனைவரும் வெளியேறினர். மாலை 5:36 மணிக்கு சிஸ்டைன் சிற்றாலயத்தின் கதவு மூடப்பட்டது. தேர்தல் அவையின் தொடக்கமாக 87 வயது நிறைந்த மால்டா நாட்டு கர்தினால் பொரோஸ்பரோ கிரேக் என்பவர் கர்தினால்-வாக்காளர்களது கடமையை நினைவுறுத்தி அவர்களுக்கு உரையாற்றினார். அவருடைய உரை முடிந்ததும் அவரும் அவையை விட்டு வெளியேறினார்.

இன்று மாலை ஒரு வாக்கெடுப்பு நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வாக்கெடுப்பின் போது புதிய திருத்தந்தை போதிய வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிஸ்டைன் சிற்றாலத்தின் வெளிக்கூரையில் பொருத்தப்பட்டுள்ள புகைக் கூண்டிலிருந்து வெண்புகை வெளியாகும். அதே நேரம் புனித பேதுரு பெருங்கோவிலின் பெரிய மணி மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ஒலி எழுப்பும். இவ்வாறு, கோவில் வளாகத்தில் கூடிவந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களும் உலக மக்களும் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்துகொள்வர்.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த ஒரு கர்தினாலுக்கும் மொத்த 115 வாக்காளர்களின் மூன்றில் இரு பங்கு வாக்குகள் (77) கிடைக்காவிட்டால் புகைக் கூண்டு கரும்புகையை வெளியிடும்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல வண்ணக் குடைகளைப் பிடித்துக்கொண்டு, சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரையில் அமைந்துள்ள புகைக் கூண்டை நோக்கியவாறு நின்றுகொண்டிருந்தார்கள். பேதுரு பெருங்கோவிலின் முற்றத்தில் இரு புறங்களிலும் பிரமாண்டமான இரு தொலைகாட்சித் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலின் உயர்ந்த முகப்பு முழுவதும் ஒளிவெள்ளம் அணிசெய்தது.

  • முதல் வாக்கெடுப்பு - கரும்புகை:

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தைப் பணியைத் துறந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பின் புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடிய திருத்தந்தைத் தேர்தல் பேரவையின் முதல் வாக்கெடுப்பு 2013, மார்ச்சு 12, செவ்வாய்க் கிழமை, வத்திக்கான் நேரம் மாலை 5:30க்கு தொடங்கியது. தேர்தலில் வாக்களித்த கர்தினால்மார் 155.

முதல் வாக்கெடுப்பில் கர்தினால்மார் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் (77) கிடைக்கவில்லை என்பதை அறிவிக்கும் வகையில் சிஸ்டைன் சிற்றாலயக் கூரையில் நிறுவப்படிருந்த புகைக்கூண்டு கரும்புகையை வெளியேற்றியது.

  • முதல் வாக்கெடுப்பில் முன்னணியில் நிற்கும் கர்தினால்மார்:

ஒரு சில இத்தாலிய செய்தி ஊடகங்களின் கணிப்புப்படி, கீழ்வரும் கர்தினால்மார் வாக்குகள் பெற்று முன்னணியில் நிற்பதாகச் செய்தி வெளியிட்டன: கர்தினால் மார்க் ஊலே (கனடா; உரோமைத் தலைமையகத்தில் பணி); ஆஞ்செலோ ஸ்கோலா (இத்தாலி; மிலான் உயர்மறைமாவட்டப் பேராயர்); பேத்ரோ ஷேரெர் (பிரேசில்; சான் பவுலோ உயர்மறைமாவட்டப் பேராயர்); ஹோர்கே மாரியோ பெர்கோலியோ (அர்ஜென்டீனா; போனஸ் அயிரெஸ் உயர்மறைமாவட்டப் பேராயர்); மால்கம் ரஞ்சித் (சிறீலங்கா; கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர்); திமத்தி டோலன் (ஐ.அ.நா; நியூயார்க் உயர்மறைமாவட்டப் பேராயர்); ஷான் ஓமால்லி (ஐ.அ.நா; பாஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர்).

அவர்களுடைய பெயர்கள் இன்று தேர்தல் அவையில் வாசிக்கப்பட்டு எதிரொலித்திருக்க வேண்டும். வேறு சில கர்தினால்மாரின் பெயர்களும் முன் தாண்டியிருக்கலாம். ஏற்கெனவே எதிர்பார்த்ததுபோல, இந்த முதல் வாக்கெடுப்பில் வாக்குகள் சிதறிப்போயிருக்க வேண்டும்.

2005இல் நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையின்போதும், அப்போதைய கர்தினால் யோசப் ராட்சிங்கருக்கு முதல் சுற்றில் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. நான்காவது சுற்றில்தான் ராட்சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாக்கெடுப்பின் முதல் சுற்றுக்குப் பின் கர்தினால்-வாக்காளர்கள் இரவு உணவு அருந்திவிட்டு, யாரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுப்பது என்று ஆழ சிந்தித்தார்கள்.

அடுத்த நாள், மார்ச்சு 13, புதன்கிழமையன்று இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு நிகழும். அப்போது தளத்தில் உள்ள முன்னணி வேட்பாளர்கள் பற்றி அதிகத் தெளிவு ஏற்படும். யாராவது ஒரு கர்தினால் பெரும்பான்மையான வாக்குகள் பெறவில்லை என்றால், மார்ச்சு 14, வியாழனிலிருந்து இதுவரை முன்னணியில் இராத வேறு கர்தினால் பெயர்கள் முன்வரக் கூடும்.

  • திருத்தந்தைத் தேர்தலின் இரண்டாம் நாள்:

திருத்தந்தைத் தேர்தலின் இரண்டாம் நாளாகிய 2013, மார்ச்சு 13, புதன்கிழமையன்று காலையில் மீண்டும் கர்தினால்-வேட்பாளர்கள் சிஸ்டைன் சிற்றாலயத்தில் வத்திக்கான் நேரம் காலை 9:30 மணிக்குக் கூடி வாக்கெடுப்பு நடத்தினார்கள். இந்த வாக்கெடுப்பின் இரு சுற்றுகளிலும் எந்த ஒரு கர்தினாலுக்கும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை என்பது காலை 11:40 மணிக்கு சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரைமேல் அமைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டிலிருந்து கரும்புகை வெளியானதிலிருந்து தெரியவந்தது.

இவ்வாறு மார்ச்சு 12ஆம் நாள் ஒரு சுற்று வாக்கெடுப்பும் இன்று காலை மற்றும் இரு சுற்று வாக்கெடுப்புகளும் ஆக மொத்தம் மூன்று சுற்று வாக்கெடுப்புகளும் நடந்தும் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது கர்தினால்மார் நடுவே பிளவு ஏற்பட்டுள்ளது என்று பொருள்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, வத்திக்கான் தகவலாளர் அருள்திரு ஃபெடரீக்கோ லொம்பார்டி கீழ்வருமாறு பதிலளித்தார்: "திருத்தந்தைத் தேர்தல் நிகழும்போது இவ்வாறு பல சுற்று வாக்கெடுப்புகள் தேவைப்படுவது இயல்பே. சென்ற நூற்றாண்டில் முதல் மூன்று சுற்றுகளில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் மட்டுமே. எனவே, இதில் வியப்புறுவதற்கு ஒன்றுமில்லை."

புதிய திருத்தந்தை விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் எதிர்பார்ப்போடு ஆயிரக் கணக்கான மக்கள் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிஸ்டைன் சிற்றாலயத்தின் மேல் கூரையில் அமைந்த புகைக் கூண்டை நோக்கியவாறே நின்றனர்.

புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்

2013, மார்ச்சு 14ஆம் நாள் புதன்கிழமை மாலையில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து சிஸ்டைன் சிற்றாலயப் புகைகூண்டிலிருந்து வத்திக்கான் நேரம் மாலை 7:09 மணிக்கு வெண்புகை வெளிப்பட்டது. புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடிநின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் செய்தி ஊடகங்கள் வழி இந்நிகழ்ச்சியைக் கவனித்துக்கொண்டிருந்த உலக மக்களுக்கும் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி தெரியவந்தது.

சுமார் 8:20 மணியளவில் புனித பேதுரு பெருங்கோவில் மேல்பகுதியில் நடுவே அமைந்துள்ள சாளரத்தின் திரையைத் திறந்துகொண்டு கர்தினால்-திருத்தொண்டர் குழுவின் மூத்த உறுப்பினர் என்னும் தகுதியில் கர்தினால் ஷான்-லூயி தோரான் மக்கள் முன் தோன்றி, "புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்" என்னும் மகிழ்ச்சிச் செய்தியை இலத்தீனில் அறிவித்தார் (Habemus Papam). புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் "திருத்தந்தை வாழ்க!" (Viva il Papa!) என்று குரலெழுப்பி ஆரவாரித்தது.

சில வினாடிகளுக்குப் பின் புதிய திருத்தந்தை யார் என்றும், அவர் என்ன பணிப்பெயர் தேர்ந்துகொண்டுள்ளார் என்றும் கர்தினால் தோரான் அறிவித்தார். புதிதாகத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் "ஹோர்கே மாரியோ பெர்கோலியோ" என்றும் அவர் "பிரான்சிசு" என்னும் பணிப்பெயரைத் தேர்ந்துள்ளார் என்றும் கர்தினால் தோரான் மக்களுக்கு அறிவித்தார். மக்கள் மீண்டும் கரவொலி எழுப்பினார்கள்.

புதிய திருத்தந்தை பிரான்சிசு

8:22 மணிக்கு புதிய திருத்தந்தை வத்திக்கான் சாளரத்தில் தோன்றி மக்களை வாழ்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

வெள்ளை அங்கி அணிந்து அதன்மேல் கழுத்திலிருந்து ஒரு சிலுவை அணிந்தவராக மக்கள் முன் தோன்றினார் திருத்தந்தை பிரான்சிசு. அவர் இத்தாலிய மொழியில் ஆற்றிய உரை:

மேலும் காண்க

திருத்தந்தைத் தேர்தல்
திருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற முறை
திருத்தந்தைத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்
திருத்தந்தைத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார்

ஆதாரங்கள்

  1. Staff (11 பெப்ரவரி 2013). "Pope Benedict XVI Announces His Resignation at End of Month". வத்திக்கான் வானொலி. http://en.radiovaticana.va/news/2013/02/11/pope_benedict_xvi_announces_his_resignation_at_end_of_month/en1-663815. பார்த்த நாள்: 1 மார்ச் 2013. 
  2. Resources on current eligible papal electors
  3. 3.0 3.1 Hariyadi, Mathias (21 February 2013). "Conclave, Cardinal Darmaatmadja Renounces for 'Health Reasons'". AsiaNews. பார்க்கப்பட்ட நாள் 1 March 2013.
  4. Holden, Michael (25 February 2013). "Britain's Top Catholic Cleric Resigns, Won't Elect New Pope" பரணிடப்பட்டது 2015-05-09 at the வந்தவழி இயந்திரம். Reuters. Retrieved 28 February 2013.
  5. The Cardinals of the Holy Roman Church – Orders and precedence
  6. Pullella, Philip (February 20, 2013). "Pope may change conclave rules before leaving: Vatican". Reuters இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130227171423/http://www.reuters.com/article/2013/02/20/us-pope-resignation-conclave-idUSBRE91J0NG20130220. பார்த்த நாள்: 21 February 2013. 
  7. Staff (25 February 2013). "Pope Benedict XVI Amends Roman Catholic Conclave Law". BBC News. Retrieved 28 February 2013.
  8. 8.0 8.1 "Conclave to begin Tuesday March 12th". Vatican Radio. 8 March 2013.
  9. John Paul II (22 February 1996). Universi Dominici Gregis. Apostolic Constitution. Vatican City: Vatican Publishing House.
  10. Paul VI (20 November 1970). Ingravescentem Aetatem (in Latin). Motu proprio. Vatican City.
  11. The Independent newspaper: Catholic Church scandal: Cardinal O'Brien faces Vatican sexual conduct inquiry as he asks forgiveness of those he 'offended', 3 March 2013
  12. Hitchen, Philippa (28 February 2013). "Benedict Pledges Obedience to His Successor". Vatican Radio. Retrieved 3 March 2013.
  13. Lavanga, Claudio; Angerer, Carlo (1 March 2013). "Vatican: Cardinals Will Meet Monday to Discuss Papal Conclave Date". NBC News. Retrieved 3 March 2013.
  14. Staff (28 February 2013). "Vatican Hints at Start Date for Papal Conclave". CBS News. Retrieved 3 March 2013.
  15. Sistine Chapel Closes Ahead of Papal Conclave | WebProNews
  16. "Vietnam Cardinal Arrives, Last 1 In For Conclave". Associated Press. 7 March 2013. http://www.npr.org/templates/story/story.php?storyId=173696172. பார்த்த நாள்: 7 March 2013. 
  17. 17.0 17.1 College of Cardinals imposes media blackout - The Washington Post
  18. Interview with Cardinal Daniel DiNardo | National Catholic Reporter
  19. http://www.bbc.co.uk/news/world-europe-21726986
  20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-11. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  21. Tweeting Cardinals Share Pre-Conclave Thoughts - ABC News
  22. "John Thavis | The Blog". Archived from the original on 2013-06-18. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  23. http://attualita.vatican.va/sala-stampa/bollettino/2013/03/04/news/30595.html
  24. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-07. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  25. http://attualita.vatican.va/sala-stampa/bollettino/2013/03/06/news/30600.html
  26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-10. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  28. As papal conclave draws near, American cardinals grow silent - chicagotribune.com
  29. "CNS STORY: Voting for new pope to begin March 12". Archived from the original on 2013-05-13. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  30. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  31. http://cnsblog.wordpress.com/2013/03/09/a-conclave-cardinals-life-by-the-clock/
  32. கர்தினால் குழுத் தலைவர் சொடானோ ஆற்றிய மறையுரை
  33. 2013 திருத்தந்தைத் தேர்தலின் முதல் நாள்
  34. திருத்தந்தை பிரான்சிசு ஆற்றிய முதல் உரை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Papal conclave of 2013
என்பதில் ஊடகங்கள் உள்ளன.